இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ்குமார் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
முன்னதாக இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோது இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்துத் தயாரிப்புத் தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆன்ட்ரூ லூயிஸ் கதையும் திரைக்கதையும் எழுதியுள்ள இத்திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட்’ (Tyler Durden and Kino Fist) நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











