உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிவாரண மையம் ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ஜோபரோஜியா (Zaporizhzhia) மாகாணத்தில் உள்ள கொமிஷுவாகா (Komyshuvakha) கிராமத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்கும் மையமாகச் செயற்பட்டு வந்த பாடசாலைக் கட்டடமே இந்தத் தாக்குதலில் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (02.11.2026) இடம்பெற்ற இத்தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிடுகையில், முதல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பதுங்கு குழியை இலக்கு வைத்து ஒன்பது குண்டுகளுடன் இரண்டாவது முறையாகத் தீவிரத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எங்கு நிவாரணம் பெறுகிறார்கள் என்பது ரஷ்யப் படைகளுக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், அமைதி முயற்சிகளை ரஷ்யா விரும்பவில்லை என்பதற்கு இந்தத் தாக்குதலே சாட்சி என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் அவசரகால சேவைகள் வெளியிட்டுள்ள காணொளிகளில், இடிக்கப்பட்டு எரிந்த நிலையில் காணப்படும் கட்டடக் குவியல்களிடையே மீட்புப் படையினர் தீவிரத் தேடுதலில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும், அவசரகால சேவைப் பணியாளர்கள் இருவரும் அடங்குவதாக மாகாண ஆளுநர் மைக்கைலோ செமிகிங் (Mykhailo Semikin) தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து 27 பேரைக் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.











