தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களில் மேலும் 81 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி மற்றும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடைகளைத் திறக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் முன்னறிவிப்பு இல்லாமல் நடத்தப்பட்டதால், மதுப்பிரியர்கள் பலரும் கடைகள் முன்பு குவியத் தொடங்கியதால் சில பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தது.
இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட 798 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 81 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் டாஸ்மாக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.











