கீவ் உள்ளிட்ட உக்ரைன் முழுவதும் உள்ள இராணுவத் தொழிற்சாலைகள் மீது இரவோடு இரவாகப் பாரிய தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய இராணுவம் வியாழக்கிழமை (12.11.2026) தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் வியாழக்கிழமை அதிகாலையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நகரின் சொலொமியான்ஸ்கி (Solomyanskyi) மாவட்டத்தில் உள்ள ஒன்பது மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் (Drone) மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கீவ் நகர முதல்வர் விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீவ் நகரில் உள்ள ஏவுகணைத் தொழிற்சாலை ஒன்றின் மீதும், பரந்த கீவ் பிராந்தியத்தில் உள்ள ஆளில்லா விமானம் பொருத்தும் கூடம் மற்றும் ஏவுகணை எரிபொருள் தொழிற்சாலை மீதும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு ஜிடோமிர் (Zhytomyr) பிராந்தியத்தில் உள்ள மின்சார துணை நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடமேற்கு ரிவ்னே (Rivne) பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி மற்றும் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்புகளும் ரஷ்யத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் உக்ரைனிய அதிகாரி ஒருவர் டெலிகிராம் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை நோக்கி இரவில் வந்த ஐந்து உக்ரைனிய ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மொஸ்கோ நகர முதல்வர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) டெலிகிராம் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா முழுவதும் இரவோடு இரவாக மொத்தம் 71 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.











