‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?’ என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கை வைத்தவரை அடித்துத் துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என வினவியுள்ளார்.
தவறு செய்யும் தமது கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்குத் துணிச்சல் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதனை மறைப்பதற்காக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் மற்றும் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் எனத் திசைதிருப்பும் அரசியலில் முதலமைச்சர் ஈடுபடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், மௌன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் தமது கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்துமாறும், இல்லையெனில் மக்கள் சக்தி தக்க பாடம் புகட்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.











