கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 இன்று (13) வெள்ளிக்கிழமை முரசுமோட்டை கிளி/முருகானந்தா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது..
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கதிரேசு ரதிதரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதன்போது பல்வேறு கலை மன்றங்கள் மற்றும் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களின் நடனம், நாட்டிய நாடகம், கிராமியக் கலை மற்றும் இசை நாடக நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான கலைக்கிளி மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்குப் பங்களிப்புச் செய்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்தப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











