யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தந்தையும் மகனும் உயிரிழந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி மத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 51 வயதுடைய தந்தையும், அவரது 9 வயது மகனும் பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், 24 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சட்ட வைத்திய அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வேறு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தை பொலிஸார் அப்புறப்படுத்திய விதம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகக் கூடி கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக சில்வா உறுதியளித்துள்ளதுடன், கண்கண்ட சாட்சிகள் அச்சமின்றி வாக்குமூலம் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.











