அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) சாத்தியமான கணக்கியல் சிக்கல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (17.11.2026) என்விடியா மீதான இந்த விசாரணை குறித்த செய்தி வெளியான போதிலும், அதன் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், நிறுவனத்தின் கணக்கியல் நடைமுறைகளே இந்த விசாரணையின் முக்கிய மையமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தெந்த குறிப்பிட்ட கணக்கியல் நடைமுறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
இந்தத் தகவலைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 13 முதல் 14 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.
முன்னதாகவே 6 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்திருந்த பங்குகள், இச்செய்தியால் மேலும் வீழ்ச்சியடைந்தன.
செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் மற்றும் கிளவுட் சேவை வழங்குநர்களுக்கு என்விடியா நிதியுதவி அளிப்பதும், தனது உபகரணங்களைப் பயன்படுத்தும் தரவு மையத் திட்டங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதும் முதலீட்டாளர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன.
இத்தகைய சிக்கலான நிதி ஏற்பாடுகள் நிறுவனத்தின் உண்மையான வருவாய்த் தரத்தை மதிப்பிடுவதை முதலீட்டாளர்களுக்குக் கடினமாக்குவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் அறிவிப்புக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த என்விடியாவின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி கோலெட் கிரெஸ் (Colette Kress), செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஆதரவளிப்பதில் தமது நிறுவனம் பெருமை கொள்வதாகவும், ஆனால் எதிர்காலத்தில் இத்துறை சார்ந்த நிதி ஒப்பந்தங்களில் மிகவும் கவனமாகத் தெரிவு செய்து ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக SEC-இன் அமலாக்கப் பிரிவுத் தலைவர் டேவிட் உட்காக் (David Woodcock) கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணை குறித்து கருத்துத் தெரிவிக்க SEC பேச்சாளர் மறுத்துவிட்டதுடன், என்விடியா தரப்பிலிருந்தும் உடனடியாகப் பதிலளிக்கப்படவில்லை.











