நாட்டிலுள்ள 13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி இன்று (21) மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று நண்பகல் 12.03 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (நவம்பர் 22) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி, கண்டி, குருநாகல், பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் திறந்தவெளிகளில் நிற்பவர்களுக்குப் பாரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், வெளிப்புறச் செயற்பாடுகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் இதனால் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











