செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப அறிவு, திறன்கள் மற்றும் சிந்தனைத் திறனுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
லோகன் நாதன் எழுதிய ‘Future Ready – Small Steps. Big Dreams’ நூலின் இலங்கை வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஹூவர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மாணவர்களுக்காகச் சிந்திக்கும் மாற்றாக அமையாமல், சிறப்பாகச் சிந்திப்பதற்கு உதவும் கருவியாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பொறுப்புடனும் நெறிமுறைகளுடனும் பயன்படுத்தும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு மாகாண மாணவர்களின் திறமைகளையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் பாராட்டிய ஆளுநர், அவர்களுக்குச் சரியான வழிகாட்டலும் வாய்ப்புகளும் அவசியம் என்றார். இதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழான வாய்ப்புகள் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மட்டுமன்றி, வளங்கள் குறைந்த கிராமப்புறப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடமும், அறிவு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேந்திரகுமார் மற்றும் நூலாசிரியர் லோகன் நாதன் ஆகியோரும் உரையாற்றினர்.
ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் பிரதிகள் நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.











