மறைந்த தமிழ் அரசியல் பிரமுகர் சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் நடைபெற்ற சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய அவர், 2002ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டுகளாக சிவாஜிலிங்கத்துடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர் அரசியல் வரலாறு, தமிழர் உரிமைப் போராட்டம் மற்றும் அரசியல் கொள்கைகளில் ஆழ்ந்த புரிதல் கொண்டவராக சிவாஜிலிங்கம் விளங்கியதாகத் தெரிவித்த திருமாவளவன், தனது கொள்கை நிலைப்பாடுகளில் அவர் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு சிவாஜிலிங்கம் போன்ற கருத்தியல் ஆளுமைகள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் தமக்குப் பெரும் இழப்பு என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.











