இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை மமிதா பைஜு நடிக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஆத்தி என்னால முடியலையே’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ‘வெள்ளிச்சுடரே’ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராம்குமாரும் விஷ்ணு விஷாலும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இதில் மமிதா பைஜு, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்கிறார்; சான் லோகேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது.











