மன்னார் மாவட்டத்தில் சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு 18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் குடியிருப்புப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், 32 பயனாளிகளுக்கு ‘திவியட்ட சேவியக் வீட்டுத்திட்டத்தின்’ கீழ் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டு, வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்ட நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறுவர் இல்லங்களில் வளர்ந்து, 18 வயதிற்குப் பின்னர் புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தனியாகத் தொடங்கும் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் குடியிருப்பு மற்றும் வாழ்வாதார சவால்களைக் கருத்திற்கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சொந்த வீடு, காணி உரிமை மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் என்பவற்றை உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, சமூக பாதுகாப்பையும் சம வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் திட்டமாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காண்டீபன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











