நாடு முழுவதும் அதிகரித்து வரும் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளுக்கான பிணை விதிகளை மிகக் கடுமையாக்கும் மற்றும் தண்டனைகளை அதிகரிக்கும் சட்டமூலம் ஆனது, அதிகாரப்பூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான பிணை மற்றும் தண்டனை சீர்திருத்தச் சட்ட மூலம் அரச அங்கீகாரத்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகச் சட்ட வடிவம் பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான சீன் பிரேசர் (Sean Fraser) இந்த தகவலை அறிவித்துள்ளார்.
நாட்டின் குற்றவியல் சட்டம் (Criminal Code), இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டம் (YCJA) மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Defence Act) ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட திருத்தங்களை இப்புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்தின் அனைத்து விதிகளும் அடுத்த 30 நாட்களில், அதாவது ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன. இனிமேல் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஜாமீன் என்பது இயல்பான ஒன்றாக இருக்காது எனவும் மாறாக, அவர்கள் சிறையிலேயே அடைக்கப்படுவதுதான் பொது விதியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சட்ட நடைமுறைகளின்படி, ஒருவருக்கு ஏன் பிணை வழங்கக் கூடாது என்ற காரணத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ், “தனக்கு ஏன் பிணை வழங்க வேண்டும் என்பதையும் தான் வெளியில் இருந்தால் சமூகத்திற்கு ஆபத்து இல்லை” என்பதையும் சந்தேக நபர் அல்லது குற்றவாளிதான் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் தீவிரக் குற்றங்களுக்கான தண்டனைக் காலங்களையும் இச்சட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளது.











