மொன்றியால் பிராந்தியத்தில் உள்ள பிரபல பள்ளிச்சபையொன்று, நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் மிக ரகசியமான தனிப்பட்ட விபரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு எண்கள் அடங்கிய ஆவணத்தைத் தவறுதலாக வெளிப்படுத்தி பெரும் தரவுக் கசிவை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக்கில் உள்ள ‘சர் வில்பிரைட் லாரியர் பள்ளிச்சபையே’ இந்த தவறைச் செய்துள்ளது.
பெற்றோர்களுக்கு அனுப்பிய அவசரப் பொது மின்னஞ்சல் ஒன்றின் மூலமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.
மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த எக்செல் (Excel Spreadsheet) கோப்பில், 2026-2027 கல்வியாண்டிற்காகத் தங்களின் பிள்ளைகளைப் பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் பெயர்கள், பிறந்த தேதிகள், பிறந்த இடங்கள், வீட்டு முகவரிகள் மற்றும் மிக முக்கியமாக அரசாங்கத்தின் ரகசிய அடையாள எண்களான ‘சமூகப் பாதுகாப்பு எண்கள்’ ஆகியவை முழுமையாக இடம்பெற்றிருந்தன.
பள்ளிச்சபையின் இந்த அலட்சியப் போக்கால் தங்களின் அடையாளங்கள் திருடப்படலாம் எனப் பெற்றோர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
தகவல் கசிந்ததை உணர்ந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தையும், பள்ளி சபையையும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்ற போதும், அதிகாரிகள் எவரும் அவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து பள்ளிச்சபையின் தலைவர் ஜேம்ஸ் டி சானோ (James Di Sano) அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











