கியூபெக் மாகாண அரசு, பிராந்திய விமானச் சேவை நிறுவனமான ‘ஏர் லியாசன்’ (Air Liaison) உடனான தனது நிதியுதவி ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கியூபெக் மாகாண அரசின் மானிய விலை திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததில், இந்நிறுவனம் போலியான பிரகடனங்களை (False declarations) சமர்ப்பித்து நிதி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பெனாய்ட் சாகரெட் (Benoit Charette) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், “ஏர் லியாசன் நிறுவனம் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ஒப்பந்தத்தின் விதிகளை முற்றிலும் மீறிச் செயல்பட்டுள்ளதால் அந்த ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது எனவும் இந்த விவகாரத்தை அரசு அதீத தீவிரத்தன்மையுடன் அணுகுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து ஏர் லியாசன் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றிப் பெற்ற கூடுதல் மானிய நிதியை (Overpaid amounts) மீண்டும் முழுமையாக மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ உரிமை கோரல் செயல்முறைகளையும் (Claims process) கியூபெக் மாகாண அரசு தற்போது தொடங்கியுள்ளது.











