நாட்டின் மத்திய வங்கியான ‘பாங்க் ஒஃப் கனடா’ (Bank of Canada), தனது பாதுகாப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்தியதன் மூலம் கனடிய தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதாக, தொழிலாளர் உறவுகள் சபை (CIRB) தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் ஒப்பந்தப் பணியாளர்களின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு இம்மாதத்தில் இரண்டாவது முறையாக தொழிலாளர் உறவுகள்
சபை உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள் நியாயமான ஊதியம், நலன்புரி உதவிகள் மற்றும் வேலை நேரச் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூன் மாதம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கியின் தலைமையகப் பாதுகாப்புப் பணிகளுக்காக ‘பிங்கர்டன் கொன்சல்டிங் & இன்வெஸ்டிகேஷன்ஸ்’ (Pinkerton Consulting
& Investigations) என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்களை மத்திய வங்கி பயன்படுத்தியமை தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது எனத் தொழிலாளர் உறவுகள் சபை தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.
இதேவேளை, தொழிலாளர் நல வாரியத்தின் இந்த அண்மைய தீர்ப்புத் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பாங்க் ஒஃப் கனடா, இத்தீர்ப்பினால் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
“தொழிலாளர் சட்டம் மற்றும் சபையின் முந்தைய வழிகாட்டுதல்கள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாகத்” தெரிவித்துள்ள மத்திய வங்கி
நிர்வாகம், இத்தீர்ப்பை எதிர்ப்பதற்காக தமக்குள்ள அனைத்து சட்ட ரீதியான வாய்ப்புகளையும் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.











