கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (28) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும். இத்திட்டத்தின் ஊடாக, நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இத்தாவில் – கோவில்காடு பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு.முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ.த.ஜெயசீலன், கிளீன் ஸ்ரீலங்கா – கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு.மருங்கன் மோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துக் கொண்டனர்.











