வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலக் காங்கிரஸ் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வளர்ந்த பிரஜைக்கும் தலா 5,000 டொலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
டாலஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்காலத் தேர்தல் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வில், சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“டிரம்ப் டிவிடெண்ட்” (Trump Dividend) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்குத் தேவையான நிதி எவ்வாறு திரட்டப்படும் அல்லது இதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து விரிவான விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வளர்ந்த நபர்கள் வாழும் நிலையில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 1 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என்றும், இதற்கு அமெரிக்க காங்கிரஸின் அனுமதி அவசியமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிபராக 3-வது தவணைக்கு போட்டியிட முடியாத நிலையில், நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் தனது கட்சியின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் டிரம்ப் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
“தேர்தல் வாக்குச்சீட்டில் எனது பெயர் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு வாக்களியுங்கள்” என்றும் அவர் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் ஈரான் மீதான போர்ச் சூழல் ஆகிய காரணங்களால் டிரம்பின் மக்கள் செல்வாக்குக் குறைந்து வருவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பணப் பரிமாற்றம் செய்யப்படும் என்ற டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்க அரசியலில் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது.











