தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது இல்லை என்ற கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளைக் கண்டித்து இடதுசாரிகள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறதா என்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணியும் திருமாவளவனும் இதனை வதந்தி என்றே கூறியுள்ளதாகத் தெரிவித்தார். நாங்களும் இதனை வதந்தி என்றே நம்புகிறோம் என அவர் கூறினார்.
இருப்பினும், இக்கூற்றுக்கு தவெக தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லையே எனக் கேட்டதற்கு, தவெகவைப் பொறுத்தவரையில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவதில்லை என்ற கொள்கையையே கடைப்பிடித்து வருவதாகவும், பாமக விஷயத்திலும் அதே கொள்கையையே அவர்கள் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர் கூறிய கருத்து குறித்துப் பேசிய அவர், ஆளும் கட்சி எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகளுக்கு எதுவும் செய்யாது என முதலமைச்சரை வைத்துக்கொண்டே கூறியதற்கு முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்றார். அத்துடன், 8 கோடி மக்களுக்குமான முதலமைச்சர் என்ற முறையில் அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய அணுகுமுறையே இருக்க வேண்டும் எனவும் பெ.சண்முகம் சுட்டிக்காட்டினார்.











