மட்டக்களப்பு பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமிக்குமாறு இந்த பிரதேச வைத்தியசாலையில் இரவு வேளைகளில் செல்லுகின்ற நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டி தேவை தொடர்பான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி பிரதேச செயலாளர் மற்றும் வைத்திய பணிப்பாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வாராந்த ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கான அம்புலன்ஸ் வண்டி இல்லாது சிரமப்படுவதாக நோயாளிகள் எங்களிடம் முறைப்பாடு செய்தனர்.
இது தொடர்பாக கடந்த வாரம் மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளரை கட்சி சார்பில் சந்தித்து பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் ஆம்புலன்ஸ் வண்டி தேவை மற்றும் அதற்கான சாரதி ஒருவரை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன்.
அவர் அப்போது எழுத்து மூலமான அறிக்கை தருமாறு கோரினார் அதை வழங்கியதையடுத்து பணிப்பாளர் தற்போது நிரந்தரமாக அம்புலன்ஸ் வண்டி மற்றும் அதற்கான சாரதியையும் வழங்க முடியாது எனவும்
தனது வாகனத்தின் சாரதியை மேலதிக கொடுப்பனவு வழங்கி இரவு வேளைகளில் நியமிப்பதாகவும் நோயாளிகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி தேவைப்படுகின்ற போது மட்டு போதனா வைத்தியசாலையில் இருந்து 5 நிமிடத்தில் அனுப்பிவைப்பதாக எனக்கு உறுதிமொழி தந்துள்ளார்.
எனவே பொதுமக்கள் இரவு வேளைகளில் உங்களுக்கு மேலதிகமான சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு செல்லவுள்ள நோயாளிகள் எந்த விதமான அச்சமின்றி பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை நாடி அம்புலன்ஸ் வண்டியை எடுத்து தருமாறு கூறுங்கள் அவர் அதற்கான ஏற்பாடு செய்வார்.
அதை வைத்தியர் செய்ய மறுத்தால் அது தொடர்பாக ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக எங்களுக்கு தந்தால் வைத்திய பணிப்பாளரை தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வைத்திய பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்ததாக பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒரு பெரிய கிராமம் இந்த கிராமத்துக்கு நீண்டகாலமாக ஒரு நிரந்தர கிராம உத்தியோகத்தர் இல்லை. இதனால் பல பொதுமக்கள் கிராம உத்தியோகத்தரை தேடி அலைந்து திரிகின்றனர்.
இந்த நிலையில் கொக்குவில் பிரதேச கிராம உத்தியோகத்தர் தற்காலிகமாக கடமையாற்ற நியமிக்கப்பட்டார். அவர் எந்த தினத்தில் வருகின்றார் எந்த தினத்தில் போகிறார் என்பது தெரியாது. அது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் சென்று நான் இந்த முறைப்பாட்டை முன்வைத்தேன்.
இதற்கு அவர் பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் கிழமையில் 3 நாட்கள் இருப்பார் என கடந்த 25ம் திகதி உறுதிமொழி தந்தார் அதன் பின்னர் 3ம் திகதி வெள்ளிக்கிழமை அரை நேரம் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் இருந்துள்ளார்.
அதேவேளை கிராம உத்தியோகத்தரை தேடி அவரது கொக்குவில் அலுவலகத்துக்கு முச்சக்கர வண்டிக்கு 700 ரூபா செலவு செய்து தேடி போனால் அவர் சில வேளைகளில் சந்திக்க முடியாது உள்ளது இதனால் இந்த கிராம மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே பிரதேச செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களே ஒரு கிராமத்தின் கிராம உத்தியோகத்தரை நியமிப்பது உங்கள் கடமை எனவே உங்கள் கடமைகளை திறம்பட செய்து பாலமீன்மடு கிராம உத்தியோகத்தர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.











