மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களைத் திருடிய ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரை சனிக்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்த திருடன், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு, சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளான்.
இது குறித்துப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான இகலகம (15468), ரகுமான் (64832), சாமர (35574), விக்கினதாஸ் (73553), திஸநாயக்கா (100404) ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டின் கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகிய வீடியோ காட்சிகளைக் கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது, ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதுடன், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட மோதிரம், பெண்டன்ட், தோடு உள்ளிட்ட நகைகளும், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











