ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு உதவிப் பொலிஸ் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி, போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்காகப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இஷாரா ஹர்ஷ குமார என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஹோமகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பல பொலிஸ் அதிகாரிகள் அவரைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் அறைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டபோது அவரது உடலில் காயங்களும் இரத்தக் கசிவும் காணப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மருத்துவ உதவி வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த பின்னரே, அவரை ஹோமகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்தபோது திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளானதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்துமாறு ஹோமகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஹோமகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் ஆரம்பகட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பில் விரைவானதும் சுதந்திரமானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் நிலையில், சந்தேக நபரின் மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பொறுப்புகள் குறித்து மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.











