அல்பேர்ட்டா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்காளர்களுக்கு இடையே குடிவரவு மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்துக் கடும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, அல்பேர்ட்டா மாகாணத்தின் குடிவரவுக் கொள்கைகள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு சுகாதார சேவைகள், கல்வி வழங்குவது தொடர்பான 1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், நீதித்துறை நியமனங்கள் மற்றும் மத்திய அரசின் செனட் சபையைக் கலைப்பது உள்ளிட்ட பல்வேறு அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பான 6 முதல் 9 வரையிலான கேள்விகளை அல்பேர்ட்டா வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த விவகாரங்களில் பெரும்பான்மையான ஆதரவு கிராமப்புறத் தொகுதிகளிலிருந்தே கிடைத்துள்ளது.
ஆனால், கல்கரி மற்றும் எட்மண்டன் ஆகிய பெருநகரப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் இக்கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துள்ளனர் அல்லது இரு பிரிவினராகப் பிளவுபட்டுள்ளனர்.
அல்பேர்ட்டா மாகாணத்தின் அரசியல் களத்தில் கிராமப்புறங்கள் தொடர்ந்து அதிக பழமைவாதக் கருத்துக்களைக் கொண்டுள்ளதே இதற்குக் காரணம் என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலமைச்சர் டேனியல் ஸ்மித்தின் அரசாங்கம் கொண்டுவந்த இந்த வாக்கெடுப்புத் திட்டங்களுக்கு வலுவான ஆணை கிடைக்கவில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த வாக்கெடுப்பு முடிவுகள் தமக்கு எச்சரிக்கையுடன் செயல்படக் கோருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்மித், பொருளாதார ரீதியிலான இடம்பெயர்வு மற்றும் வேலைவாய்ப்புகள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதால், கிராமப்புற மக்கள் குடிவரவுக் கொள்கைகளில் அதிக அக்கறை செலுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழலில், கிராமப்புற மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதோடு நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவையும் ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்மித்தின் அரசாங்கம் உள்ளது. ஆளுங்கட்சியான யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சி (UCP) பெரும்பான்மையான கிராமப்புறத் தொகுதிகளைத் தம்வசம் கொண்டிருந்தாலும், கல்கரி மற்றும் எட்மண்டன் பகுதிகளில் எதிர்கட்சியின் செல்வாக்கும், நகர்ப்புற வாக்காளர்களின் எதிர்ப்பும் பல சவால்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











