உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் பெரிய தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
அதன் நிறைவு நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தனி மனிதனை அடையாளப்படுத்தாமல் பிரச்சினையை அடையாளப்படுத்தினால் மட்டுமே அதற்குத் தீர்வு கிடைக்கும் என்றார்.
மேலும், இளைஞர்கள் தங்கள் கிராமப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் 22 லட்சம் பேர் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்றால் மட்டுமே உள்ளாட்சிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, கேரளா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தான் உள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.











