ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து பழிவாங்க முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவகம் ஒன்றின் உரிமையாளர் வழங்கிய பணம் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில், குறித்த சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுகாதாரமற்ற உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்ததற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதி திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 26ஆம் திகதி, ஏறாவூர் நான்காம் பிரிவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில், ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூன்று சிறிய பொதிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனைக் கவனித்த சுகாதார பரிசோதகர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்து போதைப்பொருளை மறைத்து வைத்த இருவரையும் அடையாளம் கண்டு இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 46 மற்றும் 32 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











