மட்டக்களப்பில், 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 52 வயதுடைய நபருக்கு, 21 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணபிள்ளை உதயராசா அல்லது உதயன் எனப்படும் குறித்த நபருக்கு எதிராக இந்தத் தீர்ப்பு இன்று (30) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, 2023ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறுமியை சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து அழைத்துச் சென்ற குற்றத்திற்காக ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும், பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார். இரண்டு சிறைத்தண்டனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.











