தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஓர் அரும்பெரும் சொத்தாகவே எம்.கே. சிவாஜிலிங்கத்தைப் பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவையடுத்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு தனித்துவமான தலைவரை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் துன்பங்களும் அநீதிகளும் இழைக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் அவரது குரல் ஓங்கி ஒலித்தது. உள்ளூர் ஆட்சி சபைகள், பாராளுமன்றம் முதல் சர்வதேச அரங்குகள் வரை தமிழ் மக்களின் அவலங்களையும் உரிமைக் கோரிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தவர்.
அரசியல் எல்லைகளையும் பதவிகளையும் கடந்து, தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் உரிமைப் போராட்டத்தையும் தனது வாழ்வின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டவர். எத்தகைய அச்சுறுத்தல் வந்த போதும் ஒருபோதும் அடிபணியாத தலைமகனார். அவரது அரசியல் நிலைப்பாடுகள், அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்பன தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.
அண்மையில் வல்வெட்டித்துறையில் அவரை நேரில் சந்தித்து, அவரது சுகநலன் குறித்து அக்கறையுடன் விசாரிப்பதற்கும், அப்பகுதியின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்கும் கிடைத்த வாய்ப்பு எனது நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். அரசியலில் எமக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் நலன், உரிமை மற்றும் எதிர்காலம் என்ற விடயங்களில் அவரது அர்ப்பணிப்பையும் பணிகளையும் மதிப்புடன் நினைவுகூர்கின்றேன்.”
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், அன்னாரின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.











