அமெரிக்கா உருவாக்கி வரும் “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் சேர கனடா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், $175 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஏவுகணை கவசத் திட்டத்திற்கான ஆரம்பக் கட்டத் திட்டங்களை செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
“கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் சேருவதற்கு கனடா தனது “நியாயமான பங்களிப்பை” செலுத்தும் என்றும், விலை நிர்ணயம் குறித்து அவர்களுடன் பேசுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா இந்த திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஒட்டாவா உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மார்க் கார்னிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையேயான விரிவான வர்த்தகம் மற்றும் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதிதான் இது என்றும் கனேடிய மத்தியஅரசு தெளிவுபடுத்தியுள்ளது.