கியூபெக் மாகாணத்தில் உள்ள விக்டோரியாவில் (Victoriaville) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று திறந்தவெளி நிலப்பரப்பில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில், விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அந்த விமானத்தில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ரூட் டி எல் ஏரோபோர்ட் (Route de l’Aéroport) பகுதிக்கு அருகே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாகக் கியூபெக் மாகாண பொலிஸார் (Sûreté du Québec – SQ) உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானம் தரையில் மோதிய கணத்திலேயே தீப்பிடித்து எரிந்தமையால், விமானியால் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக் குழுவினர், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
கியூபெக் மாகாண பொலிஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் லூயிஸ்-பிலிப் ரூயல் (Louis-Philippe Ruel) வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த பெண் விமானி 20 வயதுடையவர் என்றும், அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த தருணத்தில் விமானத்தில் வேறு எந்தப் பயணிகளும் இருக்கவில்லை என்றும், விமானி ஒருவர் மட்டுமே தனியாகப் பயணித்துள்ளார் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் தரைப்பகுதியில் இருந்த வேறு எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காகக் கியூபெக் மாகாண பொலிஸாரும் (SQ), கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சபையும் (Transportation Safety Board of Canada – TSB) இணைந்து கூட்டாய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளன.











