நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.
43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்களாக 53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.











