மொன்றியல் நகரப் பாடசாலைகளில், ‘செரேனா கியூபெக்’ (Seréna Québec) என்ற தொண்டு நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரக் கல்விப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் வழிகாட்டற் பொருட்கள் ஆனவை, மொன்றியல் மாணவர்கள் மத்தியில் தவறான புரிதல்கள், குழப்பம் மற்றும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மொன்றியல் நகரத்தின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் மைலீன் ட்ரூவின் (Dr. Mylène Drouin), பிராந்தியப் பாடசாலைச் சபைகள் மற்றும் அதிபர்களுக்குக் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘செரேனா கியூபெக்’ அமைப்பு, ‘லா செமைன் ரூஜ்’ (La Semaine Rouge – சிவப்புக் வாரம்) என்ற நிகழ்வின் மூலம் பாடசாலைகளுக்குச் சென்று
மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
இருப்பினும், இந்நிகழ்வுகளின் போது இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே இயற்கை மகப்பேறு தடுப்புமுறையான ‘சிம்ப்டோதெர்மல் முறைமையை’ (Symptothermal method) இவ்வமைப்பு மறைமுகமாக ஊக்குவிப்பதாகச் சுகாதாரத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இயற்கை முறைகளின் வரம்புகளைச் சரியாக விளக்காமல் இந்த அமைப்பு பிரச்சாரம் செய்வதாகவும், நவீன ஹார்மோன் அடிப்படையிலான பிறப்புக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்து ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான கருத்துக்களைப் பரப்புவதாகவும் இந்த அமைப்பு
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் இக்குற்றச்சாட்டுகளை ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் நாத்தலி கிரிகோயர்-ஷாரெட் (Nathalie
Grégoire-Charette) திட்டவட்டமாக மறுத்துள்ளார். மொன்றியல் நகரத்தின் பாடசாலை மாணவர்களுக்குச் ‘சிம்ப்டோதெர்மல் முறைமை’ குறித்துத் தாம் கற்பிப்பதில்லை என்றும், இது தவறான புரிதலினால் எழுந்த பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.











