மொன்றியல் நகரில் அமைந்துள்ள பிரதான போக்குவரத்து முனையங்களில் ஒன்றான செயிண்ட்-பியர் சந்திப்பை (Saint-Pierre Interchange) முற்றாக இடித்து புதிய உள்கட்டமைப்பாக மீண்டும் அமைக்கும் செயற்றிட்டம், உத்தியோகபூர்வமாகத் திட்டமிடல் கட்டத்திற்கு (Planning Stage) நகர்ந்துள்ளதாகக் கியூபெக் மாநிலப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஹைவே 20 (Highway 20) மற்றும் ரூட் 138 (Route 138) ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த மேம்பாலம், நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 1,01,000 வாகனங்கள் பயணிக்கும் மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையாகும்.
மொன்றியல் நகர மத்திய பகுதி, ட்ரூடோ சர்வதேச விமான நிலையம், வெஸ்ட் ஐலேண்ட் மற்றும் சவுத் ஷோர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான பாலமாக இது விளங்கி வருகிறது.
கடந்த 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது 60 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அதன் எட்டு வான்வழி அடுக்குகளையும் (8 structures) முற்றாக அகற்றிவிட்டுப் புதிய நவீன பாலம் கட்டப்படவுள்ளது.
புதிய வடிவமைப்பு பேருந்துப் போக்குவரத்துக்கான பிரத்யேக பாதைகள் மற்றும் மிதிவண்டிப் பாதைகள் போன்ற நிலையான போக்குவரத்து வழிவகைகளுக்கும் (active transportation) இடம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.
அத்துடன், அருகில் உள்ள செயிண்ட்-பியர் குடியிருப்புப் பகுதி மக்களின் உள்ளூர்ப் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையிலும் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.











