மொன்றியல் பெருநகரப் பகுதியில் இந்த வாரயிறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மற்றும் வீதிப் புனரமைப்புகள் காரணமாகக் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெஸ்ட் ஐலண்ட் (West Island) பிராந்தியத்திற்கான ‘ஆர்.இ.எம்’ இலகுரயில் சேவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் பெருநகரப் பகுதியில் அன்சே-ஆ-ல்’ஓர்ம் (Anse-à-l’Orme) மற்றும் போவா-பிராங்க் (Bois-Franc) நிலையங்களுக்கு இடையிலான இலகுரயில் சேவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் காலை 5:30 மணி முதல் காலை 10:00 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக நிறுத்தப்படவுள்ளன.
வாரயிறுதி நாட்களில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், கூடுதல் நேர ஒதுக்கீட்டுடன் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் கியூபெக் போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில் சேவை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளன.
ரயில்வே கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் எதிர்கால விமான நிலைய இணைப்புப் பாதைகளுக்கான முதற்கட்ட தொழில்நுட்பச் சோதனைகள் காரணமாகவே இந்த சேவைத் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக பிரத்தியேக மாற்றுப் பேருந்துகள் (Shuttle buses) இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











