கியூபெக் மாகாணத்திலுள்ள கிரான்பி மிருகக்காட்சிசாலையில் (Granby Zoo) இருந்த ஜப்பானிய ‘மகாக்க்‘ (Japanese macaque) குரங்கு ஒன்று பார்வையாளர் ஒருவரைச் சுரண்டிக் காயப்படுத்திய சம்பவத்தையடுத்து, குறித்த குரங்குடன் நேரடித் தொடர்பிலிருந்த பொதுமக்களை உடனடியாகச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ரகக் குரங்குகளிடம் அரிய வகை ‘ஹெர்பெஸ் பி’ (Herpes B) வைரஸ் காணப்படக்கூடும் என்பதாலும், அது மனிதர்களுக்குப் பரவினால் தீவிரமான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் கியூபெக் பொது சுகாதாரத் துறை இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மிருகக்காட்சிசாலையில் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக மேடைப் பகுதி ஒன்று ஊழியர்களின் கவனக்குறைவால் சரியாகப் பூட்டப்படாமல் திறந்திருந்துள்ளது.
இதைப் பயன்படுத்திய பெண் ஒருவர், தனது குழந்தைகளுடன் அந்தப் பகுதிக்குள் சென்று குரங்குக்கு உணவளிக்க முயன்றுள்ளார்.
இதன்போது, அப் பெண்ணைக் குரங்கு சுரண்டிக் காயப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் தற்போது நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதுகாப்பற்ற நிலையில் அப்பகுதி சில மணிநேரம் இருந்ததால், வேறு ஏதேனும் பார்வையாளர்கள் குரங்கைத் தொட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிரான்பி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தனது பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மீளாய்வு செய்துள்ளதுடன், இது தொடர்பான உள்நாட்டு விசாரணையையும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











