உக்ரைன் நாட்டின் பிரபல வங்கியான ‘ஓஷாட்பேங்க்’ (Oschatbank), ரஷ்யாவுக்கு எதிராகத் தொடுத்துள்ள சர்வதேச முதலீட்டு ஒப்பந்த வழக்கிற்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச நடுவர் குழுவில், இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை ரஷ்ய அரசு தனது மத்தியஸ்தராக நியமித்துள்ளது.
1998-ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை (BIT) மீறி, 2022 போர் நடவடிக்கைகளின் போது டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஷியா போன்ற பகுதிகளில் அமைந்திருந்த பல நூறு மில்லியன் டாலர் மதிப்புடைய தங்களது வங்கிக் கிளைகளையும் சொத்துக்களையும் ரஷ்யா சட்டவிரோதமாகக் கைப்பற்றி முடக்கியதாக ஓஷாட்பேங்க் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று நபர்களைக் கொண்ட சர்வதேச நடுவர் குழுவில், ரஷ்யாவின் சார்பாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டும், உக்ரைன் சார்பாக ஸ்டாவ்ரோஸ் பிரெகோலாகிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோஸ்டாரிகா நாட்டின் முன்னாள் வர்த்தக அமைச்சர் டியாலா ஜிமினெஸ் இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவராகச் செயல்படுவார்.
முன்னதாக ஜெர்மனியின் ‘விண்டர்ஷால் டீயா’ மற்றும் உக்ரைனின் ‘உக்ரெனெர்கோ’ நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சந்திரசூட், தற்போதைய சர்வதேச முதலீட்டு தகராறு வழக்கில் மத்தியஸ்தராகச் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார்.











