மக்கள் தலைநகர் கெய்வ் மற்றும் பிற நகரங்களை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷ்யா புதிய வான்வழித் தாக்குதல் கொள்கையை முன்னெடுத்து வருவதற்குப் பதிலடியாக, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் இரட்டிப்பாக்கப்படும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குளிர்காலத்திற்கு முன்னதாக உட்கட்டமைப்புகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் “புதிய கொள்கை” குறித்த ஆவணங்கள் உக்ரைனிய உளவுத்துறையிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உக்ரைன் சிவிலியன் இலக்குகளைத் தாக்காது என்றும், ரஷ்யாவிற்குப் போருக்கான பணத்தை வழங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையே பதிலடித் தாக்குதலின்போது இலக்கு வைக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
கிழக்கு டொன்பாஸ் பகுதியில் உக்ரைன் முன்னெடுத்து வரும் “விவால்டி” (Vivaldi) எனும் எதிர்த்தாக்குதல் மூலம் சுமார் 140 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
இதேவேளை, உலகளாவிய டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உக்ரைனைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவிக்காததால் இந்நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது ஜெட் மூலம் இயங்கும் புதிய ‘ஷாஹெட்’ ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இவற்றை எதிர்கொள்ள எஃப்-16 மற்றும் மிக் போர் விமானங்களைப் பயன்படுத்தி 60 சதவீதமான ட்ரோன்களை உக்ரைன் வீழ்த்தி வரும் போதிலும், வெடிமருந்து பற்றாக்குறை நிலவுவதாக ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
இதனை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகள், சொந்தமாக தயாரிக்கப்பட்ட எஃப்.பி-7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் நீண்ட தூர எஃப்.பி-9 ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் 27 பில்லியன் டொலர் இடைவெளியை நிரப்ப ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து நிதியுதவிகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.











