யாழ்ப்பாண நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல், வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்புக் குறைபாடுகள் மற்றும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையின்மை ஆகியவற்றுக்குத் தீர்வுகாண, நகரை முறையான திட்டமிடலுடன் மறுசீரமைக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2019ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படும் ‘ஆரோக்கிய நகரம்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
தொலைதூரப் பேருந்து நிலையத்தை முழுமையாகச் செயற்படுத்துதல், நகருக்குள் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகையிரத நிலையங்களைப் பொதுப் போக்குவரத்துடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலைகளில் அவசர ஊர்திகள் தடையின்றிச் செல்வதற்கான வசதிகள், நோயாளர்களை இறக்குவதற்கான இடங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகாலச் சேவைகளை வலுப்படுத்துவதுடன், வடிகான்களை முறையாகப் பராமரித்து டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நகரை ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான நகரமாக மாற்றுவதற்கு அரச நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.











