மதுரை தனிஷ்க் நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, வயல்வெளியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மதுரையில் மூன்று மாடிகளுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக்கடை கடந்த அக்டோபர் 14 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்றுவந்த நிலையில், இரண்டாம் தளம் காலியாக இருந்தது.
மேலும் மூன்றாம் தளத்தில் லாக்கர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (12.11.2026) அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர்களை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஒன்பது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தை இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஒரு வயல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போலீசார், அங்கு எருக்கலாஞ் செடியின் நடுவே புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் தோண்டி மீட்டனர்.











