அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) தகவல் தொடர்புக் கோளாறு காரணமாக ஏற்பட்ட முடக்கத்திலிருந்து மீள அமெரிக்கா போராடி வரும் நிலையில், சனிக்கிழமை 4,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், மேலும் 4,400 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை(13.11.2026) ஏற்பட்ட பாரிய தகவல் தொடர்புக் கோளாறு காரணமாக நாடு தழுவிய ரீதியில் சுமார் ஐந்து மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் அன்று சுமார் 10,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், 7,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மிக நீண்ட விமானப் போக்குவரத்து முடக்கம் இதுவாகும்.
இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கோரிய மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தலைவர் பிரையன் பெட்ஃபோர்ட் (Bryan Bedford), தற்போது அமைப்பு சீராக உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் விமானச் சேவைகள் பெருமளவில் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் இணையத் தாக்குதலா (cyberattack) என வெள்ளை மாளிகை மற்றும் மத்திய முகவர் நிலையங்கள் ஆராய்ந்த நிலையில், ஒப்பந்த நிறுவனமான எல்3ஹாரிஸ் (L3Harris) தொலைதூர நிலையம் ஒன்றில் புதிய திசைவி (router) ஒன்றைப் பொருத்தியதே இந்தக் கோளாறுக்குக் காரணம் என போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) சனிக்கிழமை (14.11.2026) தெரிவித்தார்.
இது பயனர் தவறா, பொருத்தியவர்களின் தவறா அல்லது பழுதான திசைவியா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் உள்ள 22 விமானக் கட்டுப்பாட்டு நிலையங்களில் 17 நிலையங்களின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது.
இதனால் டெல்டா (Delta), யுனைடெட் (United) மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) ஆகிய நிறுவனங்கள் சனிக்கிழமை தமது சுமார் 20 சதவீத விமானங்களையும், ஜெட்ப்ளூ (JetBlue) நிறுவனம் 40 சதவீத விமானங்களையும் இரத்து செய்தன.
விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், கட்டணமின்றிப் பயணத் திகதிகளை மாற்றிக்கொள்ள விமான நிறுவனங்கள் சலுகைகளை வழங்கியுள்ளன.
இதற்கிடையில், பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்த 50 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு அவசியம் எனப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி வலியுறுத்தியுள்ளார்.











