தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரும் திங்கட்கிழமை (16.11.2026) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மேலும், 5,400 ஏக்கர் நிலப்பரப்பில் மேகதாது அணை கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறையிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன் அணை கட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடகாவின் இந்த நடவடிக்கைக்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காத சூழலில் அனுமதியை மீறி அணை கட்டக் கூடாது என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், அவர் திங்கட்கிழமை டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.











