மட்டக்களப்பில் முகநூல் (Facebook) மூலம் பழகிய போலியான வெளிநாட்டு வைத்தியர் ஒருவரிடம் 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்து பெண் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவரின் முதநூலில் லண்டனில் உள்ள வெளிநாட்டவரான டான் என்ற வைத்தியருடன் கடந்த 13ம் திகதி இணைந்து கொண்டு நண்பர்களாகி இருவரும் முகநூல் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு கடந்த 16ம் திகதி இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதியில் தம்மை பொதிகளை விநியோகிக்கும் கம்பனி என தெரிவித்து லண்டனில் இருந்து வைத்தியர் டான் என்பவர் ஒரு பொதியை அனுப்பியுள்ளதாகவும், அதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து தருவதற்கு (கிளியர்) 87 ஆயிரம் ரூபா பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கோரியுள்ளனர்.
இதனை நம்பி அந்த பெண் 17ம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபா அனுப்பிய பின்னர், மேலும் 3 லட்சம் தேவை என்றதும் அந்த பெண்ணின் தாயார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அந்த வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மேலும் மோசடி கும்பல் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு கோரியதையடுத்து சந்தேகித்த அந்த பெண் சுதாரித்து கொண்டு மோசடி கும்பலிடம் பணம் தர முடியாது என்ற பின்னர் மீண்டும் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, அது துண்டிக்கப்பட்டுள்ளது என பணத்தை மோசடி கும்பலிடம் இழந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனவே இவ்வாறு முகநூல் ஊடாக இணையவழி மோசடி கும்பலிடம் பலர் பல இலச்சம் ரூபா பணத்தை இழந்துள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு தெரியாத இந்த முகநூல் மோசடிகாரர்களிடம் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.











