நாட்டில் இயற்றப்பட்டுள்ள புதிய குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Bill C-3) காரணமாக, கனடிய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான
அமெரிக்கர்கள் குடியுரிமை சான்றிதழ்களைப் பெற பெருமளவில் முயன்று வருகின்றனர்.
இதன் விளைவாக, அமெரிக்காவில் உள்ள ஆவணக் காப்பகங்களில் (Archives) வரலாற்றுப் பதிவுகளைக் கோரும் விண்ணப்பங்களின்
எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
கனடாவிற்கு வெளியே பிறந்த இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறையினருக்கும் கனடியக் குடியுரிமையை அளிக்கும் நோக்கில் Bill C -3 சட்டத் திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அன்று நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் அறிமுகமானதிலிருந்து, தங்களின் முன்னோர்கள் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சான்றளிக்கும் பிறப்பு, திருமணம் மற்றும் ஞானஸ்நானப் பதிவுகளைத் தேடி, பல அமெரிக்கர்கள் ஆவணக் காப்பகங்களை அதிகளவில் நாடி வருகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் (NARA) மற்றும் லூசியானா, ரோட் ஐலண்ட் உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்களில் உள்ள சிறிய காப்பக அமைப்புகள் இந்த விண்ணப்பக் கோரிக்கைகளைக் கையாள முடியாமல் திணறி வருகின்றன.
1800கள் மற்றும் 1900களில் கியூபெக் உள்ளிட்ட கனடியப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புத் தேடி அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். அந்த மக்களின் சந்ததியினரே தற்போது கனடியக் குடியுரிமைக்கு
விண்ணப்பித்து வருகின்றனர்.
கனடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 முதல் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை, 25,795 பேருக்குக் குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் Bill C-3 சட்டத்தின் கீழ் நேரடியாகப் பயன் பெற்ற 6,635 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பிறந்தவர்களாவர்.
அதேவேளை, கனேடியக் குடியுரிமைச் சான்றிதழ் கோரி நிலுவையில் உள்ளவிண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,21,800 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், விண்ணப்பங்களைச் பரிசீலிப்பதற்கான காத்திருப்புக்காலம் 12 மாதங்களிலிருந்து 25 மாதங்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











