இந்திய வானிலை ஆய்வு மையம் குமரி மாவட்டத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரையின் நுழைவாயில் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல் முட்டம், சொத்தவிளை, சங்குதுறை மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், காளிகேசம் போன்ற மற்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தடையை மீறி சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக திறப்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில் குளிப்பதற்கான தடை 4-வது நாளாக நீடிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதிதீவிர கனமழையால் கடலில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றமாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர மீனவர் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.











