கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்னரும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன ஆணைக்குழு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் வரை பாலஸ்தீன சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற மீறல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை முழுமையாகவோ அல்லது பகுதியளவோ அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து இனப்படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் கனரக வெடிமருந்துகள், ட்ரோன்கள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழு, 1967 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த நிகழ்வு 2025 ஜனவரிக்குப் பின்னரான இராணுவ நடவடிக்கைகளால் நடந்துள்ளதாகக் கூறியுள்ளது.
அதேவேளை, ஐ.நா. ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை இஸ்ரேல் முற்றாக நிராகரித்துள்ளது.
இது இஸ்ரேல் அரசை இழிவுபடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என ஜெனீவாவிலுள்ள இஸ்ரேலிய தூதுவர் டேனியல் மெரோன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலஸ்தீன அதிகாரசபையும் மாற்றுக்கருத்து தெரிவிக்கும் பாலஸ்தீனர்களை இலக்கு வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள ஆணைக்குழு, ஊடகவியலாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாகவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.











