யுத்தத்தினால் வீடுகளை இழந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்த பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் வீடுகளை இழந்து சுமார் 20 ஆண்டுகளாக நலன்புரி நிலையங்களிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் வாழும் குடும்பங்களின் நிலை கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இவ்வாண்டு சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள சுமார் 10,500 குடும்பங்களுக்கும் கட்டம் கட்டமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டில் சுமார் 5,000 வீடுகளும், 2028ஆம் ஆண்டில் எஞ்சிய வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டம் முழுமையான நிவாரண அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதால், பயனாளிகள் பெற்றுக்கொள்ளும் நிதியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் நிலவும் வறுமை, காணிப் பற்றாக்குறை மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதேச வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.











