மொண்ட்ரியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மொன்றியலுக்கு பயணித்த விமானமே, ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விபத்துக்கு உள்ளானது.
விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையிலிருந்து விலகிய அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புல்வெளிப் பகுதிக்குள் பாய்ந்தது.
விபத்துக்கு உள்ளாகும் வேளையில், அந்த விமானத்தில் 156 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 162 நபர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த எதிர்பாராத விபத்தை அடுத்து, விமான நிலையத்தின் இரண்டு பிரதான ஓடு பாதைகளில் தற்காலிகமாக மூடப்பட்டதால் பல மணிநேரம் வான்வழிச் சேவைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











