மொன்றியலில் (Montreal) உள்ள பிரபல உணவகமொன்றில் உணவுகளை உட்கொண்ட ஆறு பேர் கொண்ட குழுவொன்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் திட்டமிட்ட முறையில் தப்பியோடியுள்ளது.
மொன்றியலின் ஃபெரியர் வீதியில் (Ferrier Street) அமைந்துள்ள ‘யான்ஸ் டெலி’ (Yans Deli) என்ற பிரபல உணவகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மொன்றியலில் உள்ள ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பாதிப்புக்குள்ளான உணவகத்தின் உரிமையாளர், இது நூறு சதவீதம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையிலேயே தனது பாரம்பரிய யூத உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய நவீன உணவகத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, அவரது உணவகத்தில், உணவு உண்ட நபர்களின் குழு கட்டணத்தைச் செலுத்தாமல், தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் அந்த உணவகத்தின் கண்காணிப்புக் கெமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து மொன்றியல் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.











