கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மதுபானங்கள், சிமெந்து, தளபாடங்கள், ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராகக் கனடா முன்னெடுத்து வரும் “பாகுபாடான நடவடிக்கைகளுக்கு” பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரவுள்ளது.
இந்த புதிய வரி அறிவிப்பு, கியூபெக் மாகாணப் பொருளாதார தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1930 ஆம் ஆண்டின் அமெரிக்க வரிச் சட்டத்தின் பிரிவு 338-ன் கீழ், இந்த அபராத வரிகள் விதிக்கப்படவுள்ளன.
அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக இச்சட்டப் பிரிவைப் பயன்படுத்தி 50 சதவீத வரி விதிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
அதேவேளை, ஆற்றல் (Energy), பொட்டாஷ் (Potash), மீன் வளம், முக்கிய கனிமங்கள் மற்றும் ஏற்கனவே பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம் மற்றும் வாகன உற்பத்திகளுக்கு இப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க அதிபரின் இந்த புதிய வரி அச்சுறுத்தலுக்கு கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் (Christine Fréchette) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பினைக் காரணம் காட்டி, கியூபெக்கின் பால் பண்ணை முகாமைத்துவ அமைப்பில் எந்தவொரு தளர்வையும் ஏற்படுத்த முடியாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த கியூபெக் மாகாண முதல்வர், இந்த விவகாரம் குறித்துக் பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) நடைபெறவுள்ள மாகாண முதல்வர்களின் கூட்டத்தில் நேரில் உரையாடள்ளதாகவும் தெரிவித்தார்.











