யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.











